/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பை அகற்றுமா பேரூராட்சி?
/
ஆக்கிரமிப்பை அகற்றுமா பேரூராட்சி?
ADDED : பிப் 14, 2024 01:46 AM

போத்தனூர்:ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு ஸ்ரீராம் நகர், முல்லை நகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இவ்விடங்களுக்கு செல்ல, ஒத்தக்கால் மண்டபம் -- வேலந்தாவளம் சாலையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன், 60 அடி அகலத்தில், 1.5 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் துவக்கம் முதல் 100 அடி நீளம் வரை, 20 அடி அகலத்திற்கு சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றகோரி, எஸ்.கே.எம்.எஸ், குடியிருப்போர் நல சங்கம் சார்பில், பேரூராட்சி அலுவலகத்தில், பலமுறை மனு அளித்தும் பயனில்லை. இதையடுத்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, அரசு பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனையும், பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோரிடம், குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'தனியார் ரியல் எஸ்டேட் புரமோட்டர் சாலையை ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அரசு, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை.
மனுவை பெற்றபின், சாலையை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதாக தலைவர், செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார்' என்றார்.
உறுதியளித்தது போல் செயல்படுகிறாரா அல்லது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகிறாரா என்று பார்ப்போமே!

