/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய உணவு பாதுகாப்பு அதிகாரியாவது தரமான உணவுக்கு உத்தரவாதம் தருவாரா?
/
புதிய உணவு பாதுகாப்பு அதிகாரியாவது தரமான உணவுக்கு உத்தரவாதம் தருவாரா?
புதிய உணவு பாதுகாப்பு அதிகாரியாவது தரமான உணவுக்கு உத்தரவாதம் தருவாரா?
புதிய உணவு பாதுகாப்பு அதிகாரியாவது தரமான உணவுக்கு உத்தரவாதம் தருவாரா?
ADDED : மே 24, 2025 01:06 AM

கோவை, : கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அனுராதா, சாலையோர கடைகளின் உணவு தரத்தை உறுதிசெய்ய, முதல்கட்ட பணிகளை துவக்கியுள்ளார்.
மாநகராட்சி பகுதிகளுக்குள் மட்டும், 15 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பழங்கள், காய்கறி, உணவுகள் என அனைத்து தரப்பு உணவும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற புகார் உள்ளது.
இதற்கு முன் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக இருந்தவர், உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்வது, ஆய்வு அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றவில்லை என்ற பரவலான புகார் இருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்த அனுராதா, கோவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பதவி காலத்திலாவது, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கும் வகையில், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் நேற்று சந்தித்தார் அனுராதா.
அனுராதா கூறுகையில், ''சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை விதிமுறைகளை தெரிவித்து, அதை பின்பற்றுவதை உறுதிசெய்யும் வகையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. அனைவரும் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்து இருக்க வேண்டும்.
''உணவு தயாரிப்பு, விற்பனை அனைத்திலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுகுறித்து, முதலில் அனைவருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். விரைவில் வியாபாரிகள் அனைவரும் பங்கேற்கும் கூட்டம் நடத்தி, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்,'' என்றார்.