வடகிழக்கு பருவமழை பெய்யுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
வடகிழக்கு பருவமழை பெய்யுமா? எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
UPDATED : அக் 15, 2026 03:56 PM
ADDED : அக் 15, 2026 03:54 PM

வால்பாறை: வால்பாறையில், வடகிழக்கு பருவமழை சாரல்மழையாக துவங்கிய நிலையில் அணைகள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள ஒரு அணை கூட நிரம்பாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முதல் துவங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள நிலையில், வால்பாறையில் சாரல்மழை துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையிலாவது அணைகள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது, சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை 57 அடி நீர்மட்டம் இருந்தது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், 54 அடியும், பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், 58.64 அடி நீர்மட்டமும் இருந்தது.
