/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு முகாம்களில் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா? உரிமை தொகை எதிர்பார்ப்பில் பெண்கள்
/
சிறப்பு முகாம்களில் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா? உரிமை தொகை எதிர்பார்ப்பில் பெண்கள்
சிறப்பு முகாம்களில் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா? உரிமை தொகை எதிர்பார்ப்பில் பெண்கள்
சிறப்பு முகாம்களில் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா? உரிமை தொகை எதிர்பார்ப்பில் பெண்கள்
ADDED : நவ 12, 2025 10:52 PM

சூலுார்: சூலுார் தாலுகாவில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. கொடுத்த மனுக்களுக்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது.
தமிழகத்தில், மக்களின் குறைகளை போக்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு முகாம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கடந்த, ஜூலை மாதம், 15ம் தேதி துவங்கியது. கோவை மாவட்டத்தில், நான்கு கட்டமாக, 336 முகாம்கள் நடத்தப்பட்டன.
சூலுார் தாலுகாவில் சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஒரு நகராட்சி, ஐந்து பேரூராட்சிகள், 37 ஊராட்சிகளில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நான்கு கட்டமாகவும், பெரிய ஊராட்சிகளில், இரு கட்டமாகவும், சிறிய ஊராட்சிகளில் ஒரு கட்டமாகவும் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
15க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சார்பில், 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டன.
மக்களும், மனுக்களும் ஒவ்வொரு முகாமிலும், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். சராசரியாக ஒரு முகாமில், 2 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சூலுார் தாலுகாவில் மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மகளிர் உரிமை தொகை முகாம்களில் மற்ற மனுக்களை விட, மகளிர் உரிமை தொகை கேட்டு அளித்த மனுக்கள் தான், 50 சதவீதம் உள்ளது தெரியவந்துள்ளது. உரிமை தொகை இதுவரை கிடைக்காதவர்கள், இந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு, மனுக்களை அளிக்க ஆர்வம் காட்டினர். அனைத்து பகுதிகளிலும் நடந்த முகாம்களில், குறைந்த பட்சம், 500 பெண்கள் திரண்டு மனுக்களை அளித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், சம்மந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அரசின் அறிவிப்புக்கு பிறகு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
பெண்கள் கூறுகையில்,' மகளிர் உரிமைத் தொகை பலமுறை விண்ணப்பித்தோம். அப்போது கிடைக்கவில்லை. உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என, அரசு அறிவித்ததால், சிறப்பு முகாம்களில், மனுக்களை அளித்துள்ளோம். எங்களுக்கான உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து உள்ளோம்' என்றனர்.

