/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகைக்காக மூதாட்டி கொலை; முதியவர் கைது
/
நகைக்காக மூதாட்டி கொலை; முதியவர் கைது
ADDED : நவ 12, 2025 10:53 PM

கருமத்தம்பட்டி: ஒரு சவரன் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த, முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த வலையபாளையத்தை சேர்ந்தவர் அருக்காணியம்மாள், 80; சாந்தாமணி, மாராத்தாள், சிவசாமி ஆகிய மூன்று மகள்கள், பாலசுப்பிரமணியம் என்ற மகனும் உள்ளனர். அனைவரும் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.
தனியாக வசித்து வரும் அருக்காணி அம்மாள் வயது மூப்பு காரணமாக உணவு சமைப்பதில்லை. மகள் சாந்தாமணி தினமும் சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். அதைப்போல நேற்று காலையும் வழக்கம் போல மகள் சாந்தாமணி தாயாருக்கு சாப்பாடு கொண்டு சென்றார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அருக்காணியம்மாள், கட்டிலில் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு சாந்தாமணி அதிர்ச்சி அடைந்தார். தாய் இறந்து கிடந்ததை கண்டதும் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து சாந்தாமணி கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபாலன்,65, என்பவர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் மோதிரத்துக்காக கழுத்து நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, கோபாலனை கைது செய்த போலீசார், மோதிரத்தை மீட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலனை சிறையில் அடைத்தனர்.

