/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்துக்கு விடிவு கிடைக்குமா? இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்துக்கு விடிவு கிடைக்குமா? இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்துக்கு விடிவு கிடைக்குமா? இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலகத்துக்கு விடிவு கிடைக்குமா? இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 10:43 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், தற்போது, வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறுகிய கட்டடத்தில் செயல்படுகிறது. அந்த வளாகத்தில், பராமரிப்பில்லாத கட்டடங்களை இடித்து புதிதாக கட்டினால் பயனாக இருக்கும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில், கடந்த, 1967ம் ஆண்டு வேளாண் விரிவாக்க மையம் துவங்கப்பட்டது. அங்கு, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள், ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வந்தன.
தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், மானிய திட்டங்கள், உரம் உள்ளிட்டவை பெற அலுவலகத்துக்கு வந்து சென்றனர். பராமரிப்பில்லாத கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், கடந்த, 2021ம் ஆண்டு தெற்கு ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்காக, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. அந்த கட்டடங்களும் இடிக்கப்பட்டன.
அதன்பின், இரு அலுவலகங்களும், வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடு இல்லாத கட்டடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.தெற்கு ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்ட பின், அங்கு வேளாண்துறைக்கு இடம் இல்லாததால், தற்காலிக கட்டடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வசதிகளில்லை
வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் போதிய இடவசதியில்லாததால், அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். உரம் உள்ளிட்டவை வைக்க கூட வசதிகள் இல்லாத சூழல் உள்ளது.
அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் உட்கார கூட இடம் இல்லை. மழைக்காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
ஒன்றிய அலுவலகத்தில், தற்போது செயல்படும் வேளாண்துறை அலுவலகத்துக்கு வாடகை கேட்க திட்டமிடுவதாக தகவல்பரவுகிறது.கடந்த, மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை.
அரசு கவனிக்குமா?
விவசாயிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தெற்கு வேளாண்துறை அலுவலகத்தில், தற்போது போதிய வசதியில்லாததால் சிரமமாக உள்ளது.மீன்கரை ரோட்டில் உழவர் மையம் அமைத்து, அங்கு வடக்கு வேளாண் துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை என அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
இதனால், விவசாயிகள் ஒரே இடத்தில் அதிகாரிகளை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகின்றனர். அதே நேரத்தில், தெற்கு ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்துக்கு தனியாக கட்டட வசதி இல்லை. உரம், மானிய இடு பொருட்களை வைக்க வசதியில்லை. தற்காலிக கட்டடம் குறுகலாக இருப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் சூழல் உள்ளது. எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.
20 சென்ட் தேவை
அதிகாரிகள் கூறுகையில்,'வேளாண்துறை அலுவலக கட்டடத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. நகர பகுதியையொட்டியுள்ள விவசாயிகள் அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு பஸ் வசதியும் வேண்டும். 20 சென்ட் இடம் இருந்தால் போதும், புதிய கட்டடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,' என்றனர்.