/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?
/
விபத்து தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : ஜன 25, 2024 06:29 AM
போத்தனூர் : செட்டிபாளையம் சாலையில் மூன்று சாலைகள் சந்திப்பில் வேகத்தடை அமைத்து, விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், ரயில் கல்யாண மண்டபம் துவங்கி, வெள்ளலூர் சாலை சந்திப்பிற்கு சிறிது முன் வரை மேம்பாலம் உள்ளது. இவ்வழியே வாகன போக்குவரத்து அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக, செட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கல், மண் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள், மாநகருக்குள் அனுமதிக்கப்படும் நேரங்களில் அதிகளவு இயக்கப்படுகின்றன.
போத்தனூர் நோக்கி வாகனங்கள் வரும்போது, வெள்ளலூர் சாலை சந்திப்பு பகுதியில் விநாயகர் கோவில் அருகே, வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட பின் மீண்டும் அமைக்கவில்லை.
இதனால் இவ்விடத்தில் அடிக்கடி விபத்து நடந்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. அதுபோலவே ஈஸ்வர் நகர் பஸ் ஸ்டாப் அருகிலும் நடக்கிறது.
இதனை தவிர்க்க, ஈஸ்வர் நகர் அருகே வாகனங்கள் திரும்ப விடப்பட்டுள்ள இடைவெளி பகுதி, மேட்டூர் சாலை சந்திப்பிற்கு முன் மற்றும் கோவில் அருகே ஆகிய மூன்று இடங்களில், கட்டாயம் வேகத்தடை அமைக்க வேண்டும்.
அதுபோல் வெள்ளலூர் சாலையில் வருவோர், சந்திப்பிலுள்ள போலீஸ் குடையால், செட்டிபாளையம் சாலையில் வரும் வாகனங்களை காண்பது சிரமமாக உள்ளது. இதுவும் விபத்து நடக்க ஒரு காரணமாகும். அதனால் இவ்விடத்தில், குடையை அகற்றிவிட்டு, சிறு உயரத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர், போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.