தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டில்... அறிவிப்பு வருமா?வேளாண் அமைச்சரிடம் வலியுறுத்தல்
தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டில்... அறிவிப்பு வருமா?வேளாண் அமைச்சரிடம் வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 06, 2026 05:23 PM
ADDED : ஜூலை 06, 2026 05:12 PM

பொள்ளாச்சி: 'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட, நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில், புதிய அரசு விவசாய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளது. இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு நிறைவேற்றும் வகையில், விவசாய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு இணை செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:
தளி தென்னை நாற்றுப்பண்ணையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 'சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்'க்கு தேவையான நிதி ஒதுக்கி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், தென்னை நாற்றுப்பண்ணைக்கு செல்லும் வழித்தடத்தை தார் சாலையாக மேம்படுத்த வேண்டும்.
விவசாய சங்க பிரதிநிதிகளின் துணையோடு, மாநில புள்ளியியல் துறை தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தியில் ஏற்படும் செலவினங்களை சரியான முறையில் கணக்கீடு செய்து கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலை கிலோயாக, கிலோவுக்கு, 160 ரூபாய்க்கு பெற்றுத்தர வேண்டும்.
நெல், கரும்புக்கு வழங்குவது போல, தேங்காய் கொப்பரைக்கு விலை வீழ்ச்சி காலங்களில் மாநில அரசு ஊக்கத்தொகையாக கிலோவுக்கு, 20 ரூபாய் வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.
வேர் வாடல் நோயினால், கடந்த நான்கு ஆண்டுகளாக 15 சதவீத தென்னை மரங்கள் பாதிப்படைந்து, வேகமாக மற்ற மரங்களுக்கும் பரவுகிறது. போர்க்கால அடிப்படையில் நோயை தடுக்க மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை போல, தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க அளித்து, எவ்வித தவறும் நடைபெறாத வகையில் அரசு நிர்வாகம் செய்யலாம். கள் இறக்கி மதிப்பு கூட்டி இலங்கையை போன்று, பீர், பிராந்தி, ஒயின் போன்ற பொருட்களை அரசே தயாரித்து டாஸ்மாக் மதுக்கடைகள் வாயிலாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை நீரா பானத்துக்கு அனுமதி பெற்ற, 23 நிறுவனங்களில், நடைமுறை சிக்கல்களால், 19 நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வெளியேறிவிட்டன. எனவே, தனிநபர் அனுமதி பெறும் வகையில் எளிமைப்படுத்தி, நீரா பானம் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், தேவையான உதவிகள், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தென்னை இன்சூரன்ஸ் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கடந்த காலங்களை போல, தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தென்னை மரங்களுக்கு வரப்புகள் அமைத்து நீரை தேக்குவதற்கு ஏதுவாக, பணியாளர்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, சேலத்தில் வேளாண்துறை அமைச்சருடன் நடந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டத்திலும் வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
