ADDED : ஜூலை 06, 2026 05:20 PM
கிணத்துக்கடவு: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு, சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்திற்கும் அதிகமாக ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், அத்தியாவசிய பொருட்களில் ஏற்படும் எடை குறைபாடு காரணமாக, ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் அதிகரித்துள்ளது.
மேலும், தாயுமானவர் திட்டத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்கள் இன்றளவும் தீர்க்க முடியாமல் உள்ளது.
இதை சரி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாரிடம், ரேஷன் கடைகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதற்கு உடனடி மற்றும் நடைமுறை தீர்வுகள் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தாயுமானவர் திட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து அமைச்சரிடத்தில் மனுவும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘குடோனிலிருந்து கூட்டுறவுத்துறை வாயிலாக, ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படும் பொருட்களின் எடை, மூட்டைக்கு 3 கிலோ வீதம் குறைவாக வருகிறது. இதனால், பணியாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கமிட்டி அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
