/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஜரூர்
/
குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஜரூர்
ADDED : டிச 09, 2024 10:57 PM

வால்பாறை; வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான், சிங்கவால்குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
புலிகள் காப்பகத்தில், ஆண்டு தோறும் கோடை காலம் மற்றும் குளிர்காலங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பருவமழைக்கு முந்திய குளிர்கால கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களில், தலா எட்டு பீட்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:
மானாம்பள்ளி வனச்சரகத்தில், பருவமழைக்கு முந்தைய குளிர்கால கணக்கெடுப்பு பணிக்காக, மொத்தம் எட்டு பீட்களில், 16 நேர்கோட்டுப்பாதையில் அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
முதல் மூன்று நாட்கள் மாமிச உண்ணி மற்றும் பெரிய தாவர உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பும், அதன்பின், மாமிச உண்ணி மற்றும் தாவரங்களின் நிலை குறித்தும் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இவ்வாறு, கூறினார்.