/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய தொழில் கொள்கை வெளியீட்டால்... நார் தொழில் சிறக்கும்!
/
புதிய தொழில் கொள்கை வெளியீட்டால்... நார் தொழில் சிறக்கும்!
புதிய தொழில் கொள்கை வெளியீட்டால்... நார் தொழில் சிறக்கும்!
புதிய தொழில் கொள்கை வெளியீட்டால்... நார் தொழில் சிறக்கும்!
UPDATED : ஜன 06, 2024 08:08 AM
ADDED : ஜன 06, 2024 12:10 AM

பொள்ளாச்சி;'தமிழக அரசு வெளியிட்ட தென்னை நார் தொழில் புதிய கொள்கையால், தொழில் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது,' என, தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில், 14 மாநிலங்களில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதில், முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும், 27 மாவட்டங்களில் இந்தத் தொழில் விரிவடைந்துள்ளது.
தேங்காய் மட்டையை இயந்திரங்கள் வாயிலாக அடித்து, தென்னை நார் 30 சதவீதம், கோகோ (காயர்) பித், 70 சதவீதமும் கிடைக்கிறது. நன்றாக சென்ற இத்தொழில் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு தென்னை நார் தொழிலுக்கு புதிய கொள்கை வெளியீட்டுள்ளது. அதில், உலகத்தரத்திலான தென்னை நார் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களுக்கான அதி நவீன ஆய்வகம் நிறுவப்பட உள்ளது.
தொழில் மேம்படும்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு இந்த கொள்கை முன்னுரிமை அளிக்கிறது. தரக்கட்டுப்பாடு நடைமுறைகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வணிக மேம்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், தொழில் மேம்படும் என்ற நம்பிக்கையை ஏற்பட்டுள்ளதாக தென்னை நார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நம்பிக்கை
கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுதாகர் கூறியதாவது:
தென்னை நார் தொழில் பல்வேறு பிரச்னைகளால் தொய்வடைந்துள்ளது. இத்தொழிலுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு தென்னை நார் தொழிலுக்கான புதிய கொள்கையை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது. தொய்வடைந்துள்ள தொழில் மீண்டும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர் ஆராய்ச்சி
ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி திட்ட முன்னாள் ஆலோசகர் கவுதமன் கூறியதாவது:
தமிழக அரசு தொழில் கொள்கையை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற இடங்களில், தென்னை நார் தொழில் முனைவர்களிடம், தொழிலால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து ஆராய்ந்து, ஆலோசனை நடத்தி தொழில் கொள்கை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான முயற்சிகள், 'டான் காயர்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளன.
அதில் உள்ள சிறப்பம்சங்களாக, தென்னை நார் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு உண்டான அறிவுரைகள், மானியங்கள், பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இது தவிர, 'கோவை டான் காயர்', தமிழ்நாடு விவசாய கல்லுாரியும் இணைந்து, நான்கு கோடி ரூபாய் செலவில், ஒரு ஆய்வுக் கூடம் அமைப்பதற்கு உண்டான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றம் ஏற்படும்
இதன் வாயிலாக தமிழகத்தில் உள்ள எட்டாயிரம் தொழிற்சாலைகள் பயன்பெற வாய்ப்புள்ளது. உலக நாடுகளில் பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இதற்கு மாற்றாகவும், தென்னை நாரில் தயாரிக்கப்படும், 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பருவநிலை மாற்றத்துக்கும், நெகிழிக்கு மாற்றாகவும் இருக்கும். இதனால், தென்னை விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், கிராமப்புற தென்னை நார் தொழிற்சாலைகளில், கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்க தொழில் கொள்கை உதவும். இந்த கொள்கையால் மாற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.