/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் கைது
/
லோன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் கைது
ADDED : நவ 04, 2025 09:01 PM
நெகமம்: பொள்ளாச்சி மற்றும் நெகமம் சுற்றுப்பகுதியில் பொதுமக்களிடம், வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள வடக்கிபாளையத்தை சேர்ந்தவர் ரூபினி பிரியா, 35. இவர் நெகமம் - தளி ரோட்டில் ஆர்.ஆர்.டிரஸ்ட் என்ற பெயரில் அலுவலகம் வைத்துள்ளார். டிரஸ்ட் வாயிலாக, பொள்ளாச்சி, நெகமம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி, ஒரு லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு, 4 ஆயிரம் ரூபாய் கமிஷனாக முன்பணம் தர வேண்டும் என, கூறியுள்ளார்.
அதை நம்பி, பலரும் அவரிடம் கமிஷனாக முன்பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், பல நாட்களாக வங்கியில் கடன் பெற்று தராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், ரூபினி பிரியாவிடம் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், அவர் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என, கூறப்படுகிறது.
இதையடுத்து, திப்பம்பட்டியை சேர்ந்த இருளாயி, 37, என்பவர் நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். நெகமம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரூபினி பிரியா, 180 பேரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
நெகமம் போலீசார் ரூபினிபிரியாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே அவரை போலீசார் கைது செய்தனர். பண மோசடியில் மற்றொரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

