/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெண்தான் அறத்தை பாதுகாக்கும் தெய்வம்'
/
'பெண்தான் அறத்தை பாதுகாக்கும் தெய்வம்'
ADDED : ஆக 31, 2025 05:48 AM

வாசித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'அறம்' சிறுகதை நுால் குறித்து, கோவை சங்கரா கண் மருத்துவமனை இணை நிறுவனர் டாக்டர் ராதாரமணி பகிர்கிறார். நான் புத்தகங்களை மிகவும் நேசிக்கிறேன். மருத்துவம் சார்ந்தும், பொது சேவை சார்ந்தும் பல பணிகள் இருந்தாலும், புத்தகம் வாசிக்க தனியாக நேரம் ஒதுக்கி படித்து வருகிறேன்.
ஜெயமோகன் நாவல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது வெண்முரசு நாவலை, 6000 பக்கங்கள் படித்து முடித்து இருக்கிறேன். அந்த நாவல் பல பாகங்களை கொண்டது. அத்தனை பாகங்களையும் படித்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
ஜெயமோகனின் நுால்களில், 'அறம்' சிறுகதை தொகுப்பு முக்கியமான படைப்பு. அதில் 10 கதைகளுக்கு மேல் உள்ளன. ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது. அதை சிறப்பாக கதையாக்கி இருக்கிறார். அதில் 'அறம்', 'யானை டாக்டர்' மற்றும் 'நுாறு நாற்காலிகள்' மிக நல்ல கதைகள். அந்த மூன்றில் 'அறம்' எனக்கு ரொம்ப பிடித்த கதை.ஒரு ஏழை எழுத்தாளன் படும் கஷ்டங்களை, தத்ரூபமாக எழுதி இருக்கிறார்.
பதிப்பகங்களும், அச்சு தொழிலும் வளர்ச்சியடையாத அந்த காலத்தில், எழுத்தை நம்பி மட்டும் ஒரு எழுத்தாளன் எப்படி வாழமுடியும். ஆனால் அந்த எழுத்தாளருக்கு இலக்கியத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. மனைவி மக்களோடு கஷ்ட ஜீவனத்தில் வாழ்ந்து வருபவர்.
அப்போது ஒரு பதிப்பகத்தார், தேச தலைவர்களை பற்றி புத்தகங்கள் எழுதிக்கொடுக்க சொல்கின்றனர். அவர் மிக சந்தோஷமாக ஏற்று கொள்கிறார். எத்தனை புத்தகங்கள் வேண்டும் என்று அவர் கேட்ட போது, 100 புத்தகங்கள் வேண்டும் என்கின்றனர்.
100 நுால்களையும் நானே எழுதி கொடுக்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு, இரவு பகலாக எழுதுகிறார். ஒரு புத்தகம் எழுத, 50 ரூபாய் சன்மானம் கொடுக்கின்றனர். அவர் தன் குடும்ப தேவைக்கு ஏற்ப பணம் வாங்கி கொண்டு, மீதி பணத்தை மகள் கல்யாணத்துக்கு வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி, பதிப்பகத்தாரே பணத்தை வைத்து இருக்க சொல்கிறார்.
அத்தனை நுால்களையும், அவர்கள் கேட்ட காலத்துக்குள் எழுதி கொடுத்து விடுகிறார். ஆனால் பதிப்பக உரிமையாளர், பேசியபடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்.
இந்த பணத்தை நம்பி, மகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்துவிட்டு, பணம் இல்லாமல் பரிதவிக்கும் எந்த ஏழை எழுத்தாளர், இறுதியில் என்ன செய்தார் என்பதை வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கதையில், எழுத்தாளர் ஜெயமோகன் 'அறம்' என்றால் பெண்தான் என்கிறார். அறத்தை காக்கும் தெய்வம் பெண்; பெண்கள் தர்மத்தோடு வாழ்ந்தால், குடும்பம் மட்டுமல்ல, நாடும் சுபிட்சமாக இருக்கும் என்பதை கதை உணர்த்துகிறது.

