ADDED : செப் 10, 2025 06:58 AM
கோவை; உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி, 55. ஜி.எம். நகரில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளர். நேற்று முன்தினம் காய்கறி வாங்கிய பின், வின்சென்ட் ரோட்டில் நடந்து சென்றார்.
பின்னால் நடந்து வந்த ஒருவர், சாந்தியை திட்டியுள்ளார். அவரை சாந்தி எச்சரித்ததும் ஆத்திரம் அடைந்த அந்நபர், அருகில் கிடந்த கல்லை எடுத்து சாந்தியின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் மயங்கினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று அதிகாலை சாந்தி மீண்டும் மயக்கம் அடைந்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உக்கடம் போலீசாரின் விசாரணையில், சாந்தியை தாக்கிய நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாந்தியை தாக்கியவர் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை.
அதனால், கொலை இல்லாத மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிய ப்பட்டுள்ளது. இருந்தபோதும் அந்நபரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, அந்நபரை தேடி வருகி றோம்' என்றார்.