/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா
/
100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா
ADDED : மே 06, 2025 11:07 PM

மேட்டுப்பாளையம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில், தொடர்ச்சியாக வேலை வழங்க கோரியும், நிலுவையில் உள்ள மாதத்துக்கு சம்பளம் வழங்க கோரியும், பெண்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தர்ணா போராட்டம் செய்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இரும்பறை ஊராட்சிக்கு உட்பட்ட மோதூர், சிட்டேபாளையம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், நேற்று காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தர்ணா போராட்டம் செய்தனர். அவர்கள் கூறியதாவது:
ஜனவரி மாதம் எங்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மாதத்திற்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அதன் பின் கடந்த மூன்று மாதங்களாக, எங்களுக்கு 100 நாள் வேலை எதுவும் கொடுக்கவில்லை. 100 நாள் என்பதை, 200 நாளாக உயர்த்த வேண்டும். அதேபோன்று தினக்கூலி, 329 ரூபாய் என்று இருப்பதை, 600 ரூபாயாக உயர்த்த வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்போது, உங்கள் வங்கி கணக்கிற்கு விரைவில் ஜனவரி மாதத்திற்கான பணம் வந்து சேரும்.
மேலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின்படி, 100 நாள் வேலை விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போராட்டத்தை கைவிட்டோம், என, கூறினர்.