/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் காத்திருப்பு
/
உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் காத்திருப்பு
உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் காத்திருப்பு
உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள் காத்திருப்பு
ADDED : நவ 20, 2025 02:11 AM
பெ.நா.பாளையம்: தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்கள், கடந்த ஐந்து மாதமாக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில், மகளிர் உரிமை திட்டத்தை கடந்த, 2023 செப்., 15 முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில்,1.14 கோடி குடும்ப தலைவிகள் இந்த தொகையை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த திட்டத்தில், 10 முதல், 15 லட்சம் பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர். கடந்த ஜூலை மாதம் முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெண்களிடம் இருந்து பெறப்பட்டது.
ஐந்து மாதங்களாகியும் இதுவரை விண்ணப்பித்த பெண்களுக்கு உரிமை தொகையை வழங்குவதற்கான எவ்வித உத்தரவும் வரவில்லை.
இது குறித்து விண்ணப்பித்த பெண்களில் சிலர் கூறுகையில்,' உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்த நாளிலிருந்து, 45 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து மாதங்கள் ஆகியும், இதுவரை உரிமைத் தொகை பெறுவதற்கான எந்த உத்தரவும் வரவில்லை.
மகளிர் உரிமைத் தொகை பெற தேர்வு செய்யப்பட்டால், கடந்த, 28 மாதங்களுக்கான தொகையும் சேர்த்து வழங்கப்படுமா என, தெரியவில்லை. அதிகாரிகளும் இது குறித்தான தெளிவான பதிலை கூற தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் டிச., மாதம் முதல் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். எப்போ வரும் என தெரியவில்லை' என்றனர்.
இது குறித்து, வருவாய் துறையினர் கூறுகையில்,' அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகம் வாயிலாக குறிப்பிட்ட நபரின் வருமானம், குடும்ப சூழல் ஆகியவை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
பின்னர் இது குறித்தான விண்ணப்பங்கள் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான பெண்களுக்கு உரிமை தொகை மாதந்தோறும் விடுவிக்கப்படும்' என்றனர்.
ஆனால், மகளிர் உரிமைத் தொகை எப்போது முதல் வரும் என யாருக்கும் தெரியாததால், விண்ணப்பித்த பெண்கள் இன்று வரும், நாளை வரும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

