உரிமைத் தொகைக்கு மணிக்கணக்கில் காத்திருந்து விண்ணப்பித்த பெண்கள்
உரிமைத் தொகைக்கு மணிக்கணக்கில் காத்திருந்து விண்ணப்பித்த பெண்கள்
UPDATED : ஜூலை 23, 2025 05:10 AM
ADDED : ஜூலை 22, 2025 10:28 PM

கோவில்பாளையம்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், நூற்றுக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று உரிமை தொகைக்கு விண்ணப்பித்தனர்.
அன்னுார் தாலுகாவில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூன்றாவது முகாம் அத்திப்பாளையம் மற்றும் அக்ரஹார சாமக் குளம் ஊராட்சிகளுக்கு அத்திப்பாளையத்தில் நேற்று நடந்தது.
கோவை கலெக்டர் பவன் குமார் முகாமை துவக்கி வைத்தார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
![]() |
முகாமில் நூற்றுக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். 15 அரங்கங்கள் இருந்த போதும், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரங்கிலும், இலவச வீட்டு மனை பட்டா பட்டா மாறுதல் நில அளவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வருவாய் துறை அரங்கிலும் தான் அதிக அளவில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.
வேளாண் துறை சார்பில் ஆதார் நகல் சமர்ப்பித்த 400 பேருக்கு பப்பாளி, கொய்யா, எலுமிச்சை நாற்றுக்கள் வழங்கப்பட்டன. இலவச மருத்துவ முகாமில், கண், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.
முகாமில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி 413 பேரும் இதர கோரிக்கைகளுக்கு 501 பேரும் என மொத்தம் 914 மனுக்கள் பெறப்பட்டன.
தாசில்தார் யமுனா, அட்மா தலைவர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
சூலுார்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மனு கொடுக்க ஐந்து கிலோ மீட்டர் சென்று வர வேண்டி உள்ளது, என, மக்கள் விரக்தியுடன் கூறினர்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையம் ஊராட்சி பெரிய குயிலையில் நேற்று நடந்தது. இதில், கள்ளப் பாளையம் ஊராட்சி மக்கள் மனு அளிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
துறை வாரியாக அலுவலர்கள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இட நெருக்கடியால் மனு கொடுக்க வந்த மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மகளிர் உரிமை தொகை பெற, விண்ணப்பங்களை அளிக்க, ஏராளமான பெண்கள் ஆவணங்களுடன் வந்து காத்திருந்தனர். ஒவ்வெருவரிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, பதிவேற்றம் செய்ய தாமதம் ஆனது.
கள்ளப் பாளையம் ஊராட்சி மக்கள் கூறியதாவது:
விண்ணப்பங்களை கொடுக்க, ஐந்து கி.மீ., துாரம் வந்து செல்ல வேண்டியுள்ளது. பஸ் வசதியும் இல்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும் முகாம் நடத்தினால், மக்களின் அலைச்சல் குறையும். கூட்டமும் குறைவாக இருக்கும்; வேலையும் சீக்கிரம் முடியும். ஊராட்சி வாரியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.