/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் உரிமைத் தொகை... கிடைக்குமா?விண்ணப்பித்தவர்கள் விரக்தி
/
மகளிர் உரிமைத் தொகை... கிடைக்குமா?விண்ணப்பித்தவர்கள் விரக்தி
மகளிர் உரிமைத் தொகை... கிடைக்குமா?விண்ணப்பித்தவர்கள் விரக்தி
மகளிர் உரிமைத் தொகை... கிடைக்குமா?விண்ணப்பித்தவர்கள் விரக்தி
ADDED : பிப் 12, 2024 11:08 PM

சூலுார்;'மக்களுடன் முதல்வர்' முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்னும் எந்த தகவலும் வராததால் விரக்தி அடைந்துள்ளனர்.
சூலுார் வட்டாரத்துக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகள், ஒரு சில ஊராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் கடந்த மாதத்தில் நடந்தது. நகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாகவும், பேரூராட்சிகளில் திருமண மண்டபங்களிலும் முகாம் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மனுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் குவிந்தன. மனுக்களுக்கு, 30 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. வருவாய்த்துறை சார்ந்த வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஆனால், மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, ஒரு மாதமாகியும் எந்த தகவலும் வராததால், விண்ணப்பதாரர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:
திட்டம் அறிவிக்கப்பட்டபோது, முதன் முதலாக விண்ணப்பித்தோம். ஆனால், எங்கள் மனுக்கள் நிராகரிப்பட்டது. என்ன காரணம் என தெளிவாக தெரியவில்லை. மீண்டும் விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்தது. இதையடுத்து, மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்தோம். 30 நாட்களில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஒரு தகவலும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. சிலருக்கு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வருகிறது. ஆனால், வங்கிக்கு சென்று ஆய்வு செய்தால், பணம் வரவில்லை என்கின்றனர். எங்கள் மனுக்களின் நிலை என்னவானது என தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மகளிர் உரிமை தொகை என்பது அரசின் கொள்கை முடிவு.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கென தனி வெப்சைட் போர்டல் உள்ளது. அதன் மூலமே விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது தெரியவரும்.
பல ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளதால், குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண முடியுமா என்பது சந்தேகமே. காலதாமதம் தவிர்க்க முடியாதது,' என்றனர்.