/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணன் - தம்பி பள்ளவாரி ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கம்
/
அண்ணன் - தம்பி பள்ளவாரி ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கம்
அண்ணன் - தம்பி பள்ளவாரி ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கம்
அண்ணன் - தம்பி பள்ளவாரி ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 11, 2025 12:20 AM

தொண்டாமுத்தூர்: மூங்கில்மடை குட்டையில் உள்ள அண்ணன் தம்பி பள்ளவாரி ஓடையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மோல்டு மாஸ்டர்ஸ் நிறுவனம் இணைந்து, தடுப்பணைகள் அமைக்கும் பணியை துவங்கியது.
கோவையின் ஜீவ நதியாக விளங்கும் நொய்யல் ஆற்றில், முந்தைய காலங்களைப்போல் இல்லாமல், சமீப காலமாக கோடை காலங்களில், வெகுவாக நீர் வறண்டு வருகிறது. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி, நொய்யல் ஆற்றிற்கு நீர் ஆதாரத்தை கொண்டு வரும், மூங்கில் மடை குட்டை, அண்ணன் - தம்பி பள்ளவாரி ஓடையை தூர்வாரவும், தடுப்பணைகள் உருவாக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.
இதற்காக, 5 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கவும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், 300 அடி ஆழத்திற்கு, 20 மழைநீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கவும், 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்திட்ட பணிகளை, கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். இதில், கூடுதல் கலெக்டர் சங்கேத் பள்வந்த் வாகே, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,கோவை மாவட்டத்தில் உள்ள பயன்படாத போர்வெல்களை, மழை நீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்,என்றார்.