/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவம்பாளையம் குளம் சீரமைக்கும் பணி துவக்கம்
/
தேவம்பாளையம் குளம் சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : பிப் 12, 2025 11:25 PM

கோவில்பாளையம்; கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு, தன்னார்வலருடன் இணைந்து, அன்னூர், கோவில்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு பகுதியில் 20 குளங்களை சீரமைத்து தூர்வாரும் பணி செய்து வருகிறது.
இந்நிலையில், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தேவம்பாளையத்தில், எட்டு ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல், கரைகள் ஒழுங்கற்று, புதர்களுடன் உள்ளது. இந்த குளத்திற்கு மழை நீர் வரும் பாதை அடைபட்டுள்ளன. எனவே, இந்த குளத்தை முழுமையாக சீரமைத்து, தூர்வாரி, மழை நீர் வரும் பாதைகளை சரி செய்து, மரக்கன்றுகள் நட்டு, பறவைகள் அமரும்படி தீவு மற்றும் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. ரவுண்ட் டேபிள் சமூக அமைப்புடன் இணைந்து, நேற்று முன்தினம் இயற்கை வழிபாட்டுடன் பணி துவங்கியது. இந்தக் குளம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தை தூர்வாரி, சீரமைப்பதன் வாயிலாக, இங்கு ஐந்து கோடி லிட்டருக்கு மேல் நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும். சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆர்வமுள்ளோர் குளத்தில் களப்பணி செய்யலாம்,' என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

