ADDED : ஏப் 04, 2025 11:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு அருட்செல்வபுரம், சரோஜினிநகர், கிழக்குபகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதிகளில் குடிநீர் வசதியில்லாததால், குடிநீருக்காக நகரையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.இப்பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து, அந்த வார்டு கவுன்சிலர் வசந்தகுமார், பொதுமக்கள், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமியிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், 15வது நிதிக்குழுவில் அப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று மற்றும், நான்காவது வார்டு பகுதியில், 15வது நிதிக்குழுவின் கீழ், 13.40 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெறுகிறது.
அதில், நான்காவது வார்டில், 1,400 மீட்டருக்கு குழாய்கள் அமைக்கப்படுகிறது. வீடு,வீடாக இணைப்பு வழங்கப்படும். இப்பணிகள் முடிய, மூன்று மாதங்களாகும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
