மேற்கு புறவழிச்சாலையில் ரவுண்டானா தேர்தல் நெருங்குவதால் பணிகளில் வேகம்
மேற்கு புறவழிச்சாலையில் ரவுண்டானா தேர்தல் நெருங்குவதால் பணிகளில் வேகம்
ADDED : பிப் 11, 2026 06:54 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலையில், ஜமீன் ஊத்துக்குளி சந்திப்பு, பாலக்காடு ரோடு நல்லுார் கைகாட்டி அருகே ரவுண்டானா அமைககப்படுகிறது.
பொள்ளாச்சி நகரில் நிலவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் நிதியில் மேற்கொள்ளப்படுகிறது.இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.
ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கிய, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்து. அதன்பின், ஆமை வேகத்தில் நடைபெற்றன. இதற்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன.
மேலும், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், ஆச்சிப்பட்டி அருகே புறவழிச்சாலை மைய தடுப்பு அமைக்கப்பட்டது.அதே போன்று, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கிருஷ்ணா குளம், நல்லுார் செல்லும் ரோட்டுக்கு செல்ல பாலத்துடன் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ரோட்டில் இருந்து, குளத்துார், போடிபாளையம் செல்லும் பழைய ரோடு பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெரிசலை தவிர்க்க ஜமீன் ஊத்துக்குளி அருகே ஒன்பது மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவு வாகனங்கள் வருவதால் திடீரென திரும்பாமல் இருக்க போதிய பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதுபோன்று, பாலக்காடு ரோடு நல்லுார் கைகாட்டி அருகே ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த, 2021ல் துவங்கப்பட்ட பணிகள் ஐந்து ஆண்டுகளாக இழுபறியாக நடக்கிறது. தற்போது, தேர்தல் நெருங்குவதால் பணியை நிறைவு செய்வதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
