/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை
/
ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை
ADDED : அக் 29, 2025 11:50 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு வாயிலாக பணியில் சேர்ந்த, 65 ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டம், தொடக்கக் கல்வித்துறையில் பணிகளை வரன் முறை செய்வதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து ஆணை வழங்கும் வகையில், குறைதீர் கூட்டம், சமீபத்தில் நடத்தப்பட்டது. அவ்வகையில், தகுதியான ஆசிரியர்கள், பணிவரன்முறை குறித்து மனுக்களை வழங்கினர்.
இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலக அலுவலர்கள் வாயிலாக சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஏழு ஒன்றியங்களில், பதவி உயர்வு வாயிலாக பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் என, 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு, நேற்று, பணிவரன் முறை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி தெற்கு வட்டார அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாரதி, ஆசிரியர்களுக்கு ஆணைகளை வழங்கினார். நேர்முக உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர்கள் குணசேகரன், வேல்விழி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுகசாமி, வைதேகி, ராதிகா, பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

