ADDED : பிப் 18, 2025 07:08 AM
வடவள்ளி; கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட, 38வது வார்டு, மருதமலை அடுத்துள்ள ஐ.ஓ.பி., காலனி, ராகவேந்திரா நகர் மெயின் ரோட்டில், கடந்த, 3 மாதங்களாக, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று, குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 5 பேர் பணி செய்து வந்தனர். சுமார், 15 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில், கான்கிரீட் குழாய் இறக்கி, இணைக்கும் பணியில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கவுதம்,20 என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, குழி தோண்டப்பட்ட இடத்தின் அருகில் இருந்த மண், திடீரென கவுதம் மீது சரிந்தது. சக பணியாளர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள், சரிந்து விழுந்த மண்ணை அகற்றி, கவுதமை மீட்டு, கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், கவுதம் உயிரிழந்து விட்டதாக, தெரிவித்துள்ளார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

