UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:56 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, தனியார் தோட்டத்து வீட்டில் தொழிலாளி சுத்தியலால் அடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மங்கலம் டேம் குஞ்சியார்பதி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 53. பழங்குடியினரான இவரும், ஒலிப்பாறை கல்சாடி பகுதியைச் சேர்ந்த ருக்மணி, 26, என்பவரும், கடந்த ஒரு ஆண்டாக ஒன்றாக வசித்து வந்தனர்.
கடந்த மூன்று மாதங்க ளாக போத்தந்தோடு மலை உச்சியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் தங்கி இருவரும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் ராமசாமி இறந்து கிடப்பதை, அங்கு வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் கண்டனர். இது குறித்து, மங்கலம் டேம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.ஐ. சாம் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராமசாமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தில், ருக்மணியிடம் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் ராமசாமியை, ருக்மணி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் கூறியதாவது:
கடந்த, 6ம் தேதி இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திர மடைந்த ருக்மணி அருகிலிருந்த சுத்தியலால் ராமசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் ருக்மணி குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கைது செய்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
