/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிப்பதற்கு நேரம் இல்லை என்பது அறிவார்ந்த வாதம் அல்ல எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி
/
படிப்பதற்கு நேரம் இல்லை என்பது அறிவார்ந்த வாதம் அல்ல எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி
படிப்பதற்கு நேரம் இல்லை என்பது அறிவார்ந்த வாதம் அல்ல எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி
படிப்பதற்கு நேரம் இல்லை என்பது அறிவார்ந்த வாதம் அல்ல எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி
ADDED : ஜன 04, 2025 11:02 PM

எழுத்தாளர் ஜெயமோகன், ஆன்மிகம் முதல் அரசியல் வரை பல நுால்களை எழுதியவர். இவர் எழுதிய வெண்முரசு மகாபாரத தொகுப்பு 22,400 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது.
இவை தவிர, பல்வேறு சிறுகதை தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். ஆங்கிலத்திலும் இவரது நுால்கள் வெளியாகியுள்ளன. தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் இவரது புத்தகங்கள் வெளியாகியுள்ளன. திரைக்கதைகளை எழுதி வரும் இவர், தற்போது விடுதலை 2 திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன், தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி முறை எப்படி உள்ளது? கருத்தாழமிக்க செயல்முறைகள் குறைந்து விட்டனவே?
நமக்கு அன்றாட தேவைக்கான கல்வி முறை இருந்தால் போதும். நமது கல்வி எளிமையாக்கப்பட்டு வருகிறது. மொழிக்கு மதிப்பெண் தேவையில்லை என்ற நிலையும் உள்ளது. பொதுவாகவே மொழித்திறன் என்பது, ஒரு அபாயகரமான அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இலக்கிய கல்வி என்பது, ஆர்வமுடையவர்களுக்கு மட்டுமே தேவை என்ற எண்ணம் தற்போது உள்ளது.
எல்லோருக்கும் இது தேவை. எண்ணத்திற்கும், தகவல் தொடர்புக்குமான பயிற்சி இது. இதன் விளைவுகள், ஒரு தலைமுறையை தாண்டி தெரியவரும்போது, மீண்டும் இலக்கியங்கள் கல்விக்கு வரும். நாமும் வீழ்ச்சியை உணர்ந்த பின், திருத்திக் கொள்வோம் என நினைக்கிறேன்.
மொழி வீழ்ச்சியின் தாக்கம் தற்போது எப்படி உள்ளது?
தற்போது கல்வி பயிலும், எந்த ஒரு பட்டதாரியாலும் உடனடியாக இரண்டு பக்கங்களுக்கு மேல் எந்த ஒரு மொழியிலுமே தொடர்ச்சியாக எழுத தெரியாது. தமிழில் மதிப்பெண்ணே பெற்றிருக்க மாட்டார். சரி, ஆங்கிலம் தான் தெரியுமா என்றால், அதுவும் தெரியாது. ஆங்கில கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. முன்னிலையில் இருப்பவை மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் தான். அதன் பின் டில்லி போன்ற நகரங்கள்.
மொழி வீழ்ச்சியால், நுால்கள் விற்பனை குறைகிறதா?
தமிழ்நாட்டில் ஆங்கில நுால்கள் மிக குறைவாகத்தான் விற்பனையாகிறது. குழந்தைகள் எதை படிக்கிறார்கள் என்றால், ஆங்கிலம்தான் என்கின்றனர். இந்திய அளவில் ஆங்கிலம் தமிழ்நாட்டில் தான் குறைவு.
இலக்கிய புத்தகங்கள், வாசிப்புகள் குறைந்துள்ளனவா?
வாசிப்பு என்பது எப்போதுமே, பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள பொது நுால்கள்தான். அது இலக்கியம் மட்டுமல்ல; பொருளாதாரம், வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் நிறைய உள்ளன. இந்தியாவில் உள்ள எந்த ஆங்கில பதிப்பாளரும், தமிழ்நாட்டில் அவர்களது கிளை அலுவலகத்தையும், பதிப்பகத்தையும் கொண்டிருக்கவில்லை.
என்னுடைய ஆங்கில நுால்கள் விற்பனையில், முதல் 20 இடத்திலும் கூட சென்னை இல்லை. கோவையும் இல்லை. பெங்களூரு, கோஹிமா போன்றவைகள் தான் உள்ளன. இவ்வளவு பெரிய நகரம் சென்னை, கோவை. ஒரு நல்ல ஆங்கில புத்தக கடை இல்லை.
பரபரப்பான சூழ்நிலையில், படிப்பதற்கு நேரம் இல்லை என பலரும் சொல்கின்றனரே?
இப்போது தான் 'டிவி'யில், ஓடிடி தளங்களில் இரண்டு மணி நேரம், 10 மணி நேரம் 16 மணிநேரம் என எல்லாவற்றையும் மக்கள் பார்க்கின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு, 3 மணி நேரத்துக்கும் மேலாக தொலை காட்சியிலோ, சமூக வலைத்தளங்களிலோ மக்கள் நேரம் செலவிடுகின்றனர். அதற்கு மட்டும் நேரம் உண்டு; படிப்பதற்கு நேரம் இல்லை என்பது, அறிவார்ந்த வாதம் அல்ல.
வாசிப்பில், புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது என கருதலாமா?
ஆர்வக்குறைவு ஒன்று. இன்னொன்று, அதன் முக்கியத்துவம் பற்றி தெரியாதது. எல்லாவற்றுக்கும் மேலாக மொழிப்பயிற்சி கிடையாது. ஒரு டிவியை பார்த்துக் கொண்டிருக்க, எந்த பயிற்சியும் தேவையில்லை. ஆனால், புத்தகம் படிக்க ஏதாவது ஒரு மொழியில் தேர்ச்சி வேண்டும்.
தமிழ் மக்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ தேர்ச்சி கிடையாது. அவர்களால் அச்சிட்ட நுாலை, இணைய நுாலை தொடர்ச்சியாக படிக்க முடியாது. படிப்பதற்கு பயிற்சி தேவை.
டிவி பார்க்கும்போது, உங்களது எண்ணம் வேறு எங்கோ போனாலும், டிவி ஓடிக் கொண்டு தான் இருக்கும். படிக்கும்போது எண்ணம் கொஞ்சம் விலகினாலும் படிக்க முடியாது. புத்தகத்தை மூடி வைத்து விடுவோம். எண்ணமும், படிப்பும் ஒருநிலையில் இருந்தால் மட்டுமே, புத்தகம் படிக்க முடியும். புத்தகத்தில் படிப்பது தான் மனதில் பதியும்.
சினிமாவிலும், 'டிவி' சீரியல்களிலும் மக்களை சென்றடையும் கருத்துக்கள் பயனுள்ளவையா? சரியானதாக உள்ளதா?
அது பொழுதுபோக்குதானே, அதில் என்ன பயனுள்ளவை, பயனற்றவை உள்ளது? பொழுது போக்கு ஊடகங்கள் புது கருத்துக்களை எதுவும் சொல்லாது.
அவரவருக்கு என்ன தெரியுமோ, மக்களால் எதை ஏற்றுக் கொள்ள முடியுமோ, அதைத்தான் திருப்பித் திருப்பி சொல்வார்கள். தவறு, சரி என்று எதுவும் கிடையாது.
மக்களுக்கு கருத்துக்களை சொல்லும் காட்சி எதுவும் இல்லை. மீடியா என்பது முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு தான்.

