/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி நிறுவனங்களில் யோகா தின கொண்டாட்டம்!
/
கல்வி நிறுவனங்களில் யோகா தின கொண்டாட்டம்!
ADDED : ஜூன் 21, 2025 11:59 PM

* இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில், ஒரே மாதிரி வெள்ளை ஆடைகளை அணிந்து வந்த மாணவர்கள், 21 நிமிடங்களுக்கு 21 வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர். யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளியின் தாளாளர் சரஸ்வதி பேசுகையில், '' மூச்சு கட்டுப்பாடுகள் முதல் உடற்திறன் வளர்க்கும் ஆசனங்கள் வரை, குழந்தைகளின் வளர்ச்சியில் யோகா பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றது. ஒருமுகப்படுத்தும் திறன், சுய ஒழுக்கம், உடல், மன நலனை யோகா மேம்படுத்தும், '' என்றார்.
பள்ளியின் செயலர் பிரியா, முதல்வர் செண்பகவல்லி, யோகா பயிற்சியாளர் ராபர்ட் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
* ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சர்வதேச யோகா தினத்தில், மாணவர்களுக்கு யோகாவின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, யோகா பயிற்றுனர் கிஷோர் ஜெயின் மற்றும் அவரது குழுவினர், மாணவர்களுக்கு புஜங்காசனம், வஜ்ராசனம் போன்ற பல ஆசனங்களை பயிற்றுவித்தனர்.
ஆரோக்கிய வாழ்விற்கு யோகா அவசியம் என்பது குறித்து எடுத்துரைத்த அவர்கள், ஒவ்வொரு ஆசனத்தையும் மேற்கொள்வதால் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி பயிற்றுவித்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பள்ளியின் தலைவர் மஹாவீர் போத்ரா, துணைத் தலைவர் கமலேஷ் பாப்னா, செயலாளர் கோபால் புராடியா, பள்ளி முதல்வர் பங்கஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.