20,000 சிசிடிவி கேமராக்களை ஒருங்கிணைக்கிறது போலீஸ்: நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள்!
20,000 சிசிடிவி கேமராக்களை ஒருங்கிணைக்கிறது போலீஸ்: நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள்!
UPDATED : மே 07, 2026 11:18 PM
ADDED : மே 07, 2026 11:13 PM

கோவை:கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்தை மாநகர போலீசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மாநகரில் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனுடன், போலீஸ் ஸ்டேஷன்கள் கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் மூன்று ஆயிரம் கேமராக்கள் உள்ளன. இவ்வனைத்தையும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.
பொதுமக்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு, வீடுகளின் உள்புறம் அல்லது தனிப்பட்ட பகுதிகளை கண்காணிக்கும் கேமராக்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படமாட்டாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக, முக்கிய சாலைகள், சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்கள் போன்ற பகுதிகளில் உள்ள கேமராக்களின் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதல்கட்டமாக, 350 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் இயங்கும் கேமராக்களை மாநகர கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணிகள் நடக்கின்றன.இதன் மூலம், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று தனித்தனியாக சி.சி.டி.வி. பதிவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் குறையும். கட்டுப்பாட்டு அறையிலிருந்தே சம்பந்தப்பட்ட காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, கமிஷனர் அலுவலக வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதிலுள்ள வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இன்டர்நெட் வசதிகள் இன்றி, கேபிள் ஒயர்களில் உள்ள 'கோர்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேமராக்கள் இணைக்கப்படவுள்ளதால், தகவல் பரிமாற்றம் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், '' மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் ஒரே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைக்கு பெரிய பலமாக இருக்கும், ' என்றனர்.
