/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைரேகை பதிவு செய்து பணம் எடுக்கலாம்! தபால் அலுவலகங்களில் நடைமுறை
/
கைரேகை பதிவு செய்து பணம் எடுக்கலாம்! தபால் அலுவலகங்களில் நடைமுறை
கைரேகை பதிவு செய்து பணம் எடுக்கலாம்! தபால் அலுவலகங்களில் நடைமுறை
கைரேகை பதிவு செய்து பணம் எடுக்கலாம்! தபால் அலுவலகங்களில் நடைமுறை
ADDED : செப் 02, 2025 08:04 PM
பொள்ளாச்சி; தபால் அலுவலகங்களில், வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து, 5,000 ரூபாய் வரை பணம் எடுக்க, எவ்வித படிவத்தையும் பூர்த்தி செய்யாமல் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே போதும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கோட்டத்தில், 2 தலைமை தபால் அலுவலகங்கள், 42 துணை அலுவலகங்கள், 164 கிளை அலுவலகங்கள் உள்ளன. இங்கு, நகர் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சேமிப்புக் கணக்கு, மாதாந்திர வட்டி பெறும் கணக்கு, நிரந்தர வைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து, 5,000 ரூபாய் வரை, பணம் எடுக்க, சேமிப்பு கணக்கு புத்தகம் எடுத்துச் சென்றால் போதும்; எவ்வித படிவத்தையும் பூர்த்தி செய்யாமல் அவரின் கைரேகை பதிவுடன் பணத்தை பெற்று செல்லலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலர்கள் கூறியதாவது: வங்கிகளைப் போலவே தபால் அலுவலகங்களில், பலரும் பணத்தை டெபாசிட் செய்கின்றனர். கடந்த காலங்களில், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி இருந்தது.
தற்போது, சேமிப்பு கணக்கு புத்தகம் மட்டுமே இருந்தால் போதும். கவுன்டரில் உள்ள 'டிவைசில்' கைரேகை பதிவு செய்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் குறுகிய நேரத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இதேபோல, 5,000 ரூபாய் வரை பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களும், சேமிப்பு கணக்கு புத்தகத்துடன் கைரேகை பதிவு மட்டும் செய்தால் போதும். இதன் வாயிலாக, எழுத, படிக்க தெரியாதவர்கள், முதியவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கைரேகை பதிவு என்பது, சேமிப்பு கணக்கில் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. அப்போது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பணம் எடுக்கும்போது வாடிக்கையாளரின் அங்கீகாரத்தை சரிபார்க்கிறது.
அனைத்து தபால் அலுவலகங்களிலும் இந்த சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.