/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'
/
'ஏதாவது ஒரு விளையாட்டை தினசரி விளையாட வேண்டும்'
ADDED : டிச 31, 2024 06:40 AM

கோவை : கோவை ஈஷா கிராமோத்சவ விளையாட்டு திருவிழா, தென் மாநில அளவில் நடந்தது.
ஆண்கள் வாலிபால் பெண்கள் த்ரோபால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிட்டிங் வாலிபால், ஆகிய விளையாட்டுகள் நடந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஐந்தாயிரம் அணிகள், 43,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதன் இறுதிப்போட்டி, ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி சிலை முன்பு நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா விளையாட்டு வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில் சத்குரு பேசுகையில், ''300 ஆண்டுகளுக்கு முன் வசித்த மக்கள், ஒவ்வொரு நிகழ்வுகளையும் கொண்டாடினர். பல்வேறு காரணங்களுக்காக அவை குறைந்து விட்டன. அந்த கொண்டாட்டத்தை, புத்துணர்வை, எழுச்சியை கிராமப்புற மக்களுக்கு அளிக்க, கிராமோத்சவ விளையாட்டு திருவிழா, ஆண்டுதோறும்நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்திய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
கிரிக்கெட் வீரர் சேவாக் பேசுகையில், ''அனைவரும், தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் விளையாட்டுக்காக ஒதுக்க வேண்டும். இந்த கிராம விளையாட்டு போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகளை விட சிறப்பானதாக இருந்தது,'' என்றார்.
முன்னதாக, தென் மாநிலங்களின் பாரம்பரிய கலைகளான பறையாட்டம், தவில் நாதஸ்வரம், புலி நடனம், குசாடி நடனம், செண்ட மேளம், பஞ்சரி மேளம், வள்ள கும்மி, ஒயிலாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.