/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த வாலிபர் கைது
/
டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : ஆக 29, 2025 01:31 AM
வடவள்ளி: கவுண்டம்பாளையம், சக்தி கார்டனை சேர்ந்தவர் சுரேஷ்,44; கால்டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் முன் வாடகைக்காக காத்திருந்தார். அங்கு வந்த ஒரு வாலிபர், 'வடவள்ளி செல்ல வேண்டும்' என கூறி, ஏறியுள்ளார். அவரை, வடவள்ளி மகாராணி அவென்யூவில் விட்டார். வாடகையாக, 350 ரூபாய் கேட்டுள்ளார். வாடகை கொடுக்காமல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்காட்டி, மிரட்டியுள்ளார். கத்தியை தட்டி விட்டு, சுரேஷ் தப்ப முயன்றார்.
கோபமடைந்த வாலிபர், சுரேஷின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு, மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். மற்றொரு போன் மூலம், அவசர உதவி எண் 100க்கு சுரேஷ் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ரோந்து போலீசார், டிரைவரிடம் பறித்துச் சென்ற மொபைல் போன் டவர் மூலம் இடத்தை கண்டறிந்து, பி.என்.புதுார் பகுதியில் சுற்றித்திரிந்த அந்த வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில், கேரளா மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த விஷ்ணு,27 என்பதும், பட்டதாரியான இவர், வேலையின்றி, கோவை செல்வபுரத்தில் ரூம் எடுத்து தங்கி இருப்பதும், தெரிய வந்தது. மேலும் பணம் இல்லாததால், கால் டாக்ஸி டிரைவரிடம் எப்போதும் வாடகை பணம் இருக்கும் என்ற எண்ணத்தில், ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு, வாடிக்கையாளர் போல் அழைத்துச் சென்று, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து, விஷ்ணுவை கைது செய்தனர்.