/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மனதளவிலும், உடலளவிலும் இளைஞர்கள் பலம் பெற வேண்டும்'
/
'மனதளவிலும், உடலளவிலும் இளைஞர்கள் பலம் பெற வேண்டும்'
'மனதளவிலும், உடலளவிலும் இளைஞர்கள் பலம் பெற வேண்டும்'
'மனதளவிலும், உடலளவிலும் இளைஞர்கள் பலம் பெற வேண்டும்'
ADDED : ஏப் 05, 2025 11:06 PM

மாணவர்கள் விளையாட வேண்டும், அப்போது தான் உடலளவிலும், மனதளவிலும் பலம் கிடைக்கும் என, தேசிய பேட்மின்டன் அணி தேசிய தலைமை பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் கூறினார்.
கோவையில் நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில், பேட்மின்டனில் திறமை உள்ளவர்கள் உள்ளனர். இருப்பினும் ஒலிம்பிக்கில், தங்கம் பெறுவது கனவாக உள்ளது. எந்த இடத்தில் நாம் பின்தங்குகிறோம்?
பேட்மின்டனில் இந்தியா கடந்த, 30 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. காமன்வெல்த் போட்டிகளிலேயே பங்கேற்காத நம் நாடு, இன்று பல போட்டிகளில் வெற்றி வாகை சூடி முன்னணியில் உள்ளது.
இது ஒரு அபரிமிதமான வளர்ச்சி. தங்கப்பதக்கம் பெறாவிட்டாலும், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை பெற்றுள்ளோம்.
பேட்மின்டனில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் இது, கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளதே?
இது ஒரே நாளில் நடந்து விடாது. படிப்படியாக தான் கிராமங்கள் வரை செல்லும். மாநகரம், நகரம் என, தற்போது பல்வேறு கட்டங்களை தாண்டி, பல இரண்டாம் நிலை நகரங்களிலும் பிரபலமாகியுள்ளது.
ஒரே கட்டத்தில் செய்ய முடியாவிட்டாலும், படிப்படியாக இதை கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதற்கு காலம் பிடிக்கும். முன்னர் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது இரண்டாம் நிலை நகரங்களிலும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேட்மின்டன் அதிக செலவு பிடிக்கும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. அரசு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
கட்டமைப்பு வசதிகளில், அரசு தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். வரிவிதிப்புகளில் சற்று உதவி செய்தால் மட்டுமே, இவ்விளையாட்டை மேலும் பலரிடம் கொண்டு செல்ல முடியும். பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இன்று மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க, என்ன செய்ய வேண்டும்?
விளையாடினால் மட்டுமே உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இன்று இளம்வயதினர் மொபைல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என, ஒரே இடத்தில் அமர்ந்துவிடுகின்றனர். இந்த நிலை மாற, முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

