UPDATED : நவ 23, 2026 04:52 PM
ADDED : நவ 23, 2026 04:52 PM
கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.
தற்போது, ரயில்வே மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, 250 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கணிதம், பகுத்தறிவு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுடன், கணினி அறிவு மற்றும் வங்கி தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தப்படும்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அடிப்படையில் பயிற்சி அளிப்பதுடன், திருப்புதல் வகுப்புகள், சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகுப்புகள், சிறு தேர்வுகள் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க உள்ளவர்கள் https://forms.gle/GYFTgqtbA3RHeNHA6 கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
மேலும், விவரங்களுக்கு 0422-2642388, 9499055937 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
