/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதிரி பாகங்கள் வாங்கித் தருவதாக கார்களுடன் கம்பி நீட்டிய 'யூ டியூபர்'
/
உதிரி பாகங்கள் வாங்கித் தருவதாக கார்களுடன் கம்பி நீட்டிய 'யூ டியூபர்'
உதிரி பாகங்கள் வாங்கித் தருவதாக கார்களுடன் கம்பி நீட்டிய 'யூ டியூபர்'
உதிரி பாகங்கள் வாங்கித் தருவதாக கார்களுடன் கம்பி நீட்டிய 'யூ டியூபர்'
ADDED : ஏப் 24, 2025 11:17 PM
கோவை, ; குறைந்த விலைக்கு உதிரிபாகங்கள் வாங்கித் தருவதாக கூறி, கார்களை திருடிச் சென்ற 'யூடிபூபரை' கோவை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கணபதி, பாரதி நகரை சேந்தவர் வினோத் குமார், 25; அதே பகுதியில் உள்ள பால் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்து தருவதாக கூறி, மணியகாரம் பாளையத்தைச் சேர்ந்த 'யூ டியூபர்' சந்தோஷ் குமார், 38 அறிமுகமானார்.
பால் பண்ணை குறித்து வீடியோ எடுத்து, 'யூ டியூபில்' பதிவேற்றம் செய்து விளம்பரம் செய்து வந்துள்ளார். அவருக்கு தெரிந்த வேறு 'யூ டியூப் சேனல்'களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் வைத்துள்ளதாகவும், கார், பைக் வாங்கி விற்று வருவதாகவும், வினோத் குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, 'பால் பண்ணைக்கு சொந்தமான 'ஆடி', 'பென்ஸ்' கார்களுக்கு சில உதிரி பாகங்கள் வாங்க வேண்டும்; தெரிந்த நபர்கள் இருந்தால் கூறுங்கள்' என, சந்தோஷிடம் வினோத்குமார் தெரிவித்தார். அதற்கு சந்தோஷ், மார்க்கெட்டில் கிடைக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தெரிந்தவர்களிடம் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதை நம்பிய வினோத் குமார், பிப்., 23ல் கார்களை சந்தோஷிடம் ஒப்படைத்தார். உதிரிபாகங்கள் வாங்க, ரூ.3.70 லட்சம் பணத்தையும் கொடுத்திருக்கிறார். கார்களை எடுத்துச் சென்ற சந்தோஷ், பல நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்த வினோத் குமார், சந்தோஷின் மொபைல் போனுக்கு அழைத்தபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. சந்தோஷ் குமாரின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, 'யூ டியூபர்' சந்தோஷ் குமாரை தேடி வருகின்றனர்.

