/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்; மாடு குறுக்கே ஓடியதால் விபரீதம்
/
வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்; மாடு குறுக்கே ஓடியதால் விபரீதம்
வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்; மாடு குறுக்கே ஓடியதால் விபரீதம்
வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்; மாடு குறுக்கே ஓடியதால் விபரீதம்
ADDED : மே 29, 2024 05:05 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மாடு சாலை குறுக்கே ஓடியதால் நிலைதடுமாறிய வேன் கவிழ்ந்து, 12 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த ஆரோக்கியபுரம், ஜான் பிராபிஸ்ட் மகன் ஸ்டாலின்,39; தனியார் நிறுவன மேலாளர். இவர், தனது 2 வயது மகள் மோனிகாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு உறவினர்கள் 16 பேருடன், மேக்சி கேப் வேனில் ஊருக்கு புறப்பட்டார்.
வேனை, அதன் உரிமையாளரான அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம், மாதாபுரம், அந்தோணிசாமி மகன் ஆரோக்கியதாஸ், 44; ஓட்டினார். மாலை 4:30 மணிக்கு வேப்பூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தியம் கிராமம் அருகே வந்தபோது, சாலையோர நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, திடீரென துள்ளிக்குதித்து சாலையின் குறுக்கே ஓடியது.
இதில், நிலைதடுமாறிய வேன், மாடு மீது மோதியபடி, சாலையில் கவிழ்ந்து உருண்டது. அதில், ஸ்டாலின், ஆரோக்கியதாஸ், குழந்தை மோனிகா உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.