/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு
/
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு
ADDED : செப் 16, 2024 06:47 AM

சிதம்பரம், : உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் மொபைல் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தைரியமாக இருங்கள். உங்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன' என்று ஆறுதல் கூறினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், 16 கால் மண்டபத் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்; ரயில்வே அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தலைமையில் கைலாஷ் ஆன்மிக சுற்றுலாவுக்கு, கடந்த 1ம் தேதி சிதம்பரத்தில் இருந்து 28 பேர் புறப்பட்டனர். சிதம்பரத்தில் இருந்து சென்னை வழியாக டில்லி சென்ற இக்குழுவினருடன், கோவையை சேர்ந்த இருவர் 3ம் தேதி இணைந்து கொண்டனர்.
அங்கிருந்து 30 பேரும், 4ம் தேதி காத்தகோடம் சென்றனர். அங்கிருந்து டார்ஜிலா வழியாக ஆதிகைலாஷ் சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து திரும்பும்போது, 20 கி.மீ., தொலைவில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் 30 பேரும், தாவகட் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதே சமயம் அவர்கள் சென்ற வாகனத்திலும் டீசல் தீர்ந்தது. செய்வதறியாமல் திகைத்த அவர்கள், புத்தி என்ற பகுதியில் தங்கினர். மின்சாரம் இல்லாமல், மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நான்கு நாட்களாக வெளியே வரமுடியமல் சிக்கிய தகவல் அவர்களின் உறவினர்களுக்கு தெரிந்தது. அதையடுத்து, பக்தர்களின் உறவினர்கள், அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து முறையிட்டனர்.
அமைச்சரின் நடவடிக்கையால், கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பக்தர்கள் சிக்கியுள்ள பகுதியின் கலெக்டரை தொடர்பு கொண்டார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் மந்திக்சிங் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை மீட்பு பணிகள் துவங்கியது. முன்னதாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தயார் நிலையில் இருக்குமாறு, தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டருடன் புத்தி பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக பராசக்தி, 78; பார்வதி, 70; மலர், 54; கோமதி, 56; அலமேலு கிருஷ்ணா, 73, ஆகிய 5 பேரும், ஹெலிகாப்டர் மூலம் டார்ஜிலாவிற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 5 பேர் வீதம் 30 பேரும் மீட்கப்பட்டனர்.
மீட்பு பணி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. மீட்கப்பட்ட அனைவருக்கும், டார்ஜிலாவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. அதன் பின், அங்கிருந்து புறப்பட்டு, டில்லி வந்தடைந்தனர். அங்கிருந்து இன்று மதியம், சென்னை வருகின்றனர். பின், சொந்த ஊர் வருவார்கள்.
ஆதி கைலாஷிற்கு ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து, அவர்களின் உறவினர்கள் நிம்மதியடைந்தனர்.

