/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
80,000 கன்றுகள் விற்பனைக்கு... தயார்; விருதை தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி
/
80,000 கன்றுகள் விற்பனைக்கு... தயார்; விருதை தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி
80,000 கன்றுகள் விற்பனைக்கு... தயார்; விருதை தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி
80,000 கன்றுகள் விற்பனைக்கு... தயார்; விருதை தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி
ADDED : செப் 16, 2024 05:53 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 80 ஆயிரம் மா, நெல்லி, கொய்யா செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
விருத்தாசலம், காட்டுக்கூடலுார் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. இங்கு, தோட்டக்கலைத்துறையின் மூலம் அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, சிந்துாரா, காலப்பாடு, நீலம் ஆகிய 6 ரக மா கன்றுகள்; லக்னோ 49, சிட்டிடார் வகை கொய்யா; பாலுார் 1 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி கன்றுகள் மென்தட்டு ஒட்டு, பக்க ஒட்டு, பதியம், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும், வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி கன்றுகள், கத்தரி, மிளகாய், நெல்லி, சப்போட்டா, சாமந்தி மற்றும் துளசி, கீழாநெல்லி உட்பட 9 வகையான மூலிகை செடிகளும் பராமரிக்கப்படுகின்றன.
இவை, தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மானிய விலையிலும், நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இயற்கை பேரிடர் பாதிக்கும் நாகை, அரியலுார், தஞ்சை, பெரம்பலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் இருந்து தோட்டக்கலைப் பயிர்கள், முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, 50 ஆயிரம் கொய்யா கன்றுகள், 20 ஆயிரம் மா கன்றுகள், 10 ஆயிரம் நெல்லி கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. அதில், நேரடி விலையில் கொய்யா கன்றுகள் 30 ரூபாய்க்கும், குறுத்து ஒட்டு மா கன்று 70, பக்க ஒட்டு மா 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் சமர்பித்து, மானிய விலையில் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், 30 ஆயிரம் வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி துவங்க உள்ளது.