ADDED : ஜூலை 14, 2026 08:43 PM
கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என, 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தல், மெட்ரிக் பள்ளிகள் புதிதாக திறப்பது, அங்கீகாரம் வழங்குவது, அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிக்காக வரும் விண்ணப்பங்களை முக்கிய அதிகாரி ஒருவர் ‘ப’ வைட்டமின் பெற்றுக் கொண்டு பெயரளவில் பரிசீலனை செய்து, சென்னை கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி விடுகிறார்.
அந்த அதிகாரி கல்வித்துறையில் வேறு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் தான் ஏற்கனவே பணி செய்த இடத்திற்கு தனக்கு வேண்டியவரை பணியமர்த்தி விட்டு அதன் மூலமாக, அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் விண்ணப்பங்களை தற்போது, பணிபுரியும் இடத்தில் இருந்தபடியே பரிசீலனை செய்யும் வேலைகளை சத்தமின்றி முடித்து விட்டு ‘ப’ வைட்டமின் பெற்று விடுகிறாராம். இதன் மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அங்கீகாரம் புதுப்பித்தல் பணிகளை சுலபமாக முடித்து விடுகின்றன. கல்வித்துறை அதிகாரிகளுக்கு, வைட்டமின் ‘ப’ வாங்கி தரும் வேலையையும் கச்சிதமாக முடிப்பதால் இவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கல்வித்துறையில் இவர் கூறுவது தான் எழுதப்படாத சட்டமாக உள்ளது.
மாவட்டத்தி்ற்குள்ளேயே பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் அந்த அதிகாரியின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வித்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
