/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேச பிரிவினை கொடூரங்களின் புகைப்பட கண்காட்சி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு
/
தேச பிரிவினை கொடூரங்களின் புகைப்பட கண்காட்சி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு
தேச பிரிவினை கொடூரங்களின் புகைப்பட கண்காட்சி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு
தேச பிரிவினை கொடூரங்களின் புகைப்பட கண்காட்சி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு
ADDED : ஆக 15, 2024 04:38 AM

விருத்தாசலம்: 'தேச பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தினத்தையொட்டி, ரயில் நிலையங்களில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த 1947ம் ஆண்டு, இந்திய பிரிவினையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் துயரங்களை நினைவு கூறும் வகையில், ஆகஸ்ட் 14ம் தேதி, 'தேச பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தினமாக' மத்திய அரசு கடைபிடிக்கிறது.
அதன்படி, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் பிரதான ரயில் நிலையங்களில் நேற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அதில், கூடி வாழ்தல் ஒரு சிறந்த வாழ்க்கை முறை, பிரிவினையின் பின்னணி, பிரிட்டிஷ் அரசு நியாயமான தீர்வை வழங்கும் நடுவராக அல்லாமல் மத்தியஸ்தராகவே செயல்பட்டது, ஒற்றை நாடாக அல்லாமல் பிரிவினையில் இந்தியா சுதந்திரம் பெறுவது பெரிய சோகம் என்ற பத்திரிக்கைகளின் கருத்துகள், பிரிவினையின் துயரச் சுமைகளை சுமந்து செல்லும் ரயில்கள், இடப்பெயர்வு, அகதி போன்ற பல தலைப்புகளில் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக, பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த மக்களின் போக்குவரத்திற்கு ரயில்வே அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
இருபகுதிகளில் இருந்தும் தினமும் ரயில்கள் இயக்கப்பட்டாலும், அந்த ரயில்கள் இறுதி இலக்கை அடைந்தபோது, இறந்த உடல்களுடனும் காயமடைந்த நபர்களுடனும் சென்றடைந்த சோகக் கதைகள் ஏராளம் என்பதை சுட்டிக்காட்டும் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவரது எக்ஸ் தள பதிவில், 'பிரிவினையின் கொடூரமான வலிகளை மறக்கவே முடியாது. ஆக., 14ம் நாள் பிரிவினை கொடூரங்களின் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது' என்று கூறியதும், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
பயணிகள் பார்வையிடும் வகையில், ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்கு எதிரில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.