/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நரசிங்கமங்கலம் ஓடையில் பாலம் அமைக்க கோரிக்கை
/
நரசிங்கமங்கலம் ஓடையில் பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 08, 2024 11:45 PM
பெண்ணாடம்: நரசிங்கமங்கலம் - எடையூர் இடையே, ஓடையின் மீது புதிதாக பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் - எடையூர் ஓடை வழியாக தற்காலிக செம்மண் சாலை அமைத்து எரப்பாவூர், நரசிங்கமங்கலம், எடையூர், மன்னம்பாடி, விளாங்காட்டூர், பெரம்பலுார், கொடுக்கூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், பெண்ணாடம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
மழைக் காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இரு கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம்.
நரசிங்கமங்கலம் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் செல்ல 10 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் சென்று அங்கிருந்து விருத்தாசலம் செல்ல வேண்டும்.
இதேபோன்று, எடையூர், விளாங்காட்டூர், மன்னம்பாடி கிராம மக்கள் பெண்ணாடம் வர 20 கிலோ மீட்டர் துாரமுள்ள விருத்தாசலம் சென்று அங்கிருந்து பெண்ணாடம் வர வேண்டும்.
இதனால் காலவிரயம் ஏற்படுவதுடன் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.
எனவே, நரசிங்கமங்கலம் - எடையூர் இடையே உள்ள ஓடையின் குறுக்கே புதிதாக பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.