/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை மணிமுக்தாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு
/
விருதை மணிமுக்தாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு
ADDED : ஆக 05, 2024 12:05 AM

விருத்தாசலம்: ஆடி அமாவாசையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பொது மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து, விருத்தகிரீஸ்வரர் சுவாமியை வழிபட்டால், காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, நேற்று ஆடி அமாவாசையையொட்டி, மணிமுக்தாற்றில் அதிகாலை முதலே ஏராளமானோர் அரிசி, காய்கறிகள், அகத்திக்கீரை, எள் சாதம் உள்ளிட்ட பொருட்களுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, விருத்தகிரீஸ்வரர் சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அங்குள்ள பசு மடத்தில் பராமரிக்கப்படும் மாடுகளுக்கு வெல்லம் கலந்த அகத்திக்கீரையை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.