ADDED : ஜூலை 23, 2024 11:29 PM

சென்னை-கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக சென்னை, கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், விரைவு பஸ்கள், டூரிஸ்ட் வாகனங்கள், டாரஸ் லாரிகள் என 24 மணி நேரமும் சென்று வருகிறது. இப்பாலம் வளைவான இடத்தில் அமைந்துள்ளதுடன், குறுகியதாக இருப்பதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. கனரக லாரிகள், டாரஸ், டேங்கர் லாரிகள் குறுகிய பாலத்தின் தடுப்பு கட்டைகளில் மோதி அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. பாலத்தின் தடுப்பு கட்டைகளும் அடிக்கடி வாகனங்கள் மோதி சேதமாகி வருகிறது.
பாலம் உள்ள இடத்தில் இரவு நேரங்களில் லைட் வெளிச்சம் இல்லாததால் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் பாலம் இருப்பது தெரியாமல் தடுப்பு கட்டைகளில் மோதி விபத்திற்குள்ளாகின்றன. பாலத்தின் தடுப்பு சுவரும் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கடந்த வாரம் கூட, சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார், பாலத்தில் மோதி, வாய்க்காலில் விழுந்தது. மருத்துவ மாணவர் உட்பட 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
எனவே, சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தை, அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்துக்களை தடுக்க, போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிபார்க்கின்றனர்.