ADDED : ஆக 29, 2024 11:36 PM

திட்டக்குடி: ராமநத்தம் பஸ் நிலையத்தில், ஜீவா ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி.,மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், ஒடுக்கப்பட்டோர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், ஆட்டோ சங்க நிர்வாகிகள் இப்ராஹிம், பெரியசாமி, தங்கராசு, தர்மதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். மினி பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.