ADDED : மே 26, 2024 05:52 AM

புவனகிரி: புவனகிரி அருகே பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பேட்டரி திருடியவர், வாங்கியவர் என 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி போலீசார் கடந்த 23ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சொக்கன்கொல்லை பகுதியில் பைக்கில் பேட்டரிகளுடன் வந்த நபரை நிறுத்தினர். அப்போது அந்த நபர் பைக்கை நிறுத்தி விட்டு தப்பியோடினார். போலீசார் பைக்கை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய நபரை வயலாமூரில் அவரது வீட்டில் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், விஜய், 23; என்பதும், புவனகிரி, மருதுார், புதுச்சத்திரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மினி சரக்கு வேன், டிராக்டர் மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட வாகனங்களில் 20 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியது தெரிய வந்தது.
மேலும் திருடிய பேட்டரிகளை உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த நாஜிம், 29; என்பவர் இப்பகுதியில் தங்கியிருந்து திருட்டு பேட்டரிகளை குறைந்த விலைக்கு வாங்கியதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் விஜய், நாஜிம் ஆகிய இருவரையும் கைது செய்து 4 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.