/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெறும் கையோடு வாங்க... புது டி.எஸ்.பி., அசத்தல்
/
வெறும் கையோடு வாங்க... புது டி.எஸ்.பி., அசத்தல்
ADDED : செப் 04, 2024 06:15 AM

விருத்தாசலத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக கிரியா சக்தி நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் பொறுப்பேற்றார். குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும் எனவும், போக்குவரத்து விதிகள் முறையாக கடைபிடிக்கப்படும் என தெரிவித்து, அதற்கேற்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதன்படி, சமீபத்தில் மாநில மகிளா காங்., சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த டி.எஸ்.பி., கிரியா சக்தி, 300 மீட்டர் வரை நடந்து செல்லுங்கள். அதன்பின், வாகனங்களில் செல்லுங்கள் என கட்டுப்பாடுகளை விதித்தார். இது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், 'இங்கு வருபவர்கள் பரிசுப் பொருட்கள், சால்வை மற்றும் பூங்கொத்து எதுவும் எடுத்து வர வேண்டாம்' என நோட்டீஸ் அச்சடித்து, டி.எஸ்.பி., முகாம் அலுவலக சுவரில் ஒட்டியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிகளை, உள்ளூர் வி.ஐ.பி.,க்கள், அரசியல் புள்ளிகள் பலரும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, நன்மதிப்பை பெறுவது வழக்கம். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், டி.எஸ்.பி., கிரியா சக்தி தன்னை சந்திக்க வருவோருக்காக ஒட்டிய நோட்டீஸ், அவரது நடவடிக்கை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.