/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் கஸ்டம்ஸ் சாலை பணி கிடப்பில்
/
கடலுாரில் கஸ்டம்ஸ் சாலை பணி கிடப்பில்
ADDED : ஆக 21, 2024 07:46 AM

பொதுமக்கள் பயன்பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், பொதுத்தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் தொய்வின்றி பல பகுதிகளில் நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால், கடலுாரில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அ.தி.மு.க, ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு சில திட்டங்கள் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கடலுாரில் இருந்து கண்டரக்கோட்டை வரையில், பெண்ணையாற்றையொட்டி, பழைய கஸ்டம்ஸ் ரோடு அமைக்கப்பட்டது. இப்பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. மீதியுள்ள பணிகள் நடைபெற யாருமே எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த சாலை முழுமை பெறுமேயானால் கடலுாரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைவதோடு, விழுப்புரம் செல்வபவர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.
சிறந்த சாலை வருகிறது என இரு பக்கமும் உள்ள நில உரிமைதாரர்கள் உயர்ந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் சாலை அமையவில்லை. தற்போது சாலை முழுவதும் குப்பை, கோழி கழிவு, இறந்துபோன விலங்குகள் போடப்படும் இடமாக மாறியுள்ளது. கழுகுகள் கூட்டம் நிரம்பி வழியும் இந்த சாலையில் போக்குவரத்தும் குறைந்துவிட்டது.
அதேப்போல், கடலுாரின் மையப்பகுதியான புதுநகர் போலீஸ் நிலையம் எதிரே மாணவியர்கள் சாலையை குறுக்காக கடக்க 2 போலீசார் பணியில் இருக்க வேண்டும். இதை தவிர்ப்பதற்காக தனியார் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடலுாரில் அ.தி.மு.க., எம்.பி.,யாக அருண்மொழித்தேவன் இருந்தபோது, அவரது சிறப்பு நிதியில் பிளை ஓவர் அமைக்கப்பட்டது. துவக்க காலத்தில் போலீசார் மாணவியர்களை பிளை ஓவரை பயன்படுத்துமாறு வழி வகை செய்தனர். அதன் பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. சாலையின் மையத்தில் இருந்த தடுப்பு கட்டை அகற்றப்பட்டு போலீசார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளை ஓவரை எந்த மாணவியரும் பயன்படுத்தாமல், காட்சி பொருளாக மாறி, பாழாகி வருகிறது.
எனவே, திட்டங்களை யார் கொண்டுவந்தார்கள் என்பதைவிட, மக்களுக்கு பயனுள்ளாத உள்ளதா என்பதை மட்டும் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும். அதன்படி, கடலுாரில் கிடப்பில் உள்ள கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

