/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் நிலைய நடைமேடையில் டில்லி பெண்ணுக்கு பிரசவம்: விருத்தாசலத்தில் நள்ளிரவில் பரபரப்பு
/
ரயில் நிலைய நடைமேடையில் டில்லி பெண்ணுக்கு பிரசவம்: விருத்தாசலத்தில் நள்ளிரவில் பரபரப்பு
ரயில் நிலைய நடைமேடையில் டில்லி பெண்ணுக்கு பிரசவம்: விருத்தாசலத்தில் நள்ளிரவில் பரபரப்பு
ரயில் நிலைய நடைமேடையில் டில்லி பெண்ணுக்கு பிரசவம்: விருத்தாசலத்தில் நள்ளிரவில் பரபரப்பு
ADDED : மே 10, 2024 09:28 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 2:00 மணியளவில், டில்லி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை 1ல், நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில், 32 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி ஒருவர், 4 வயது மகனுடன் ரயிலுக்கு காத்திருந்தார்.
அப்போது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு தரையில் படுத்து உருண்டார். தகவலறிந்த ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார், அங்கிருந்த பெண் பயணிகளுடன் சேர்ந்து, கர்ப்பிணிக்கு முதலுதவி அளித்தனர். அப்போது, அவருக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தை வெளியே வரத் துவங்கியது. உடன் அங்கிருந்த பெண் ஒருவர், தான் வைத்திருந்த புடவையை அரணாக மாற்றி, பிரசவம் பார்க்கத் துவங்கினார்.
நள்ளிரவு 2:30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்குள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடைமேடைக்கு வந்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்தி மட்டுமே பேசும் அப்பெண், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட மறுத்து, 4 வயது மகனுடன் வெளியேற முயன்றார்.
அவரை, மருத்துவமனை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் ஆண் சிசு பராமரிக்கப்படுகிறது.
டாக்டர்கள் கூறுகையில், 'எதுவும் பேச மறுப்பதுடன், சிகிச்சைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட மறுப்பதால், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் குழந்தை பராமரிக்கப்படுகிறது.
தனது 4 வயது மகனுடன் வெளியேறவே முயற்சிக்கிறார். சிகிச்சைக்கு பின், பிறந்த குழந்தையை ஏற்க மறுத்தால், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.