/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: கடலுாரில் கோலாகலம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
/
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: கடலுாரில் கோலாகலம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: கடலுாரில் கோலாகலம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - நீட்' மாதிரி நுழைவு தேர்வு: கடலுாரில் கோலாகலம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஏப் 29, 2024 03:58 AM

கடலுார், : 'தினமலர் நாளிதழ்', ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனத்துடன் இணைந்து கடலுாரில் நடத்திய 'நீட்' மாதிரி நுழைவுத் தேர்வில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே மாதம் 5ம் தேதி, நீட் நுழைவு தேர்வு நடக்கிறது. அதையொட்டி, 'நீட்' தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில், 'தினமலர் நாளிதழ்', ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனத்துடன் இணைந்து 'நீட்' மாதிரி நுழைவுத் தேர்வை கடலுாரில் நேற்று நடத்தியது.
கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் 1:20 வரையில் தேர்வு நடந்தது. அதையொட்டி, மாணவ, மாணவியர் காலை 7:45 மணி முதலே தேர்வு மையத்திற்கு வரத் துவங்கினர். திட்டக்குடி ஹரிகரன் முதல் மாணவராகவும், வடலுார் சவுமியா இரண்டாவதாகவும் வந்தனர்.
காலை 9:00 மணி முதல், 9:45 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். சரியாக 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது. அதற்கு முன்பாக, 'தினமலர் நாளிதழ்' சார்பில் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமி சேர்மன் பழனிவேலுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து, ஸ்காலர் ஸ்பெக்ட்ரா நிறுவன மேலாண் இயக்குனர் சுரேஷ், தேர்வு விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, பெற்றோருக்கு ஆலோசனை வழங்கினார்.
மாணவ, மாணவியர் ஆர்வம்
மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்கள் அமர கல்லுாரி வளாகத்தில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாதிரி தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வரவும், மொபைல் போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், பை, பர்ஸ் உள்ளிட்டவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டது.
காலை 10:00 மணிக்கு மாணவர்களுக்கு ஓ.எம்.ஆர்., ஷீட் மற்றும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வினாத்தாள் வழங்கப்பட்டன. பால் பாயின்ட் பேனாவால் மாணவர்கள் விடைகளை குறித்தனர்.
கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடலுார், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான திட்டக்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர். மாணவிகளே அதிகளவில் பங்கேற்றனர். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ மாணவியருக்கு, உணவு வழங்கப்பட்டது.
சிறந்த அனுபவம்
தேசிய தேர்வு முகமை நடத்தும் உண்மையான 'நீட்' தேர்வு போன்று நேற்று நடந்த மாதிரி 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது.
'நீட்' தேர்வு குறித்து பயம் கலந்த குழப்பமான மனநிலையில் வந்த மாணவ, மாணவிகள் மாதிரி தேர்வு முடிந்த பிறகு 'நீட்' தேர்வு குறித்த புரிதலோடு உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது. மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர், உண்மையான 'நீட்' தேர்வு எழுதிய மனநிறைவோடு சென்றனர்.

