தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால்...அதிருப்தி: அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தல்

விருத்தாசலம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால்...அதிருப்தி: அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தல்

விருத்தாசலம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால்...அதிருப்தி: அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 18, 2026 04:38 AM

ADDED : ஜூலை 17, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 04:38 AM ADDED : ஜூலை 17, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்கிட, 8.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம் தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, கொள்ளிடம், பரவனாறு போன்ற ஆறுகளையும்; வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா போன்ற ஏரிகளையும்; உள்ளடக்கியது.

சுற்றியுள்ள 10 மாவட்டங்களுக்கு வடிகாலாக இருந்த நிலையில், ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக அள்ளியது, மழைநீரை சேமிக்காதது, நீர்நிலைகள் துார்வாராதது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சியது போன்ற காரணங்களால், நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்டது.

மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் 3,500க்கும் அதிகமான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், சிறு மின்விசை பம்புகள் பயன்பாட்டில் இருந்தும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாத நிலை தொடர்கிறது.

இதையடுத்து, கடந்த 2019, ம் ஆண்டு ஜூலையில், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு திட்டக்குடி, வடலுார் நகராட்சிகள், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை சேர்ந்த, 625 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020,ம் ஆண்டு டிசம்பரில் துவங்கிய பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நான்கு பகுதிகளாக பிரித்து, நபார்டு வங்கி மற்றும் குறைந்தபட்ச சேவை திட்டம் (எம்.என்.பி.,) நிதியுதவியின் கீழ் தீவிரமாக நடந்தது.

20 லட்சம் பேர் பயன் இதன் மூலம், 20 லட்சம் பேருக்கு தினசரி தேவையான குடிநீர், 94.61 மில்லியன் லிட்டர் வழங்கப்படும். இதற்காக, என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை 400 மி.மீ., விட்டமுள்ள இரும்பு குழாய்கள் மூலம் 8.20 கி.மீ., தொலைவிற்கு கீழ்வளையமாதேவி கிராமத்தில் 31.26 மில்லியன் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது.

4 பூஸ்டர் தொட்டிகள் அங்கு, 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள சேகரிப்பு தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, வெவ்வேறு குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டர்கள் மூலம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை, பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை, திட்டக்குடி அடுத்த கொட்டாரம், ராமநத்தம் அடுத்த ஆவட்டி ஆகிய

நான்கு பூஸ்டர் நீர் சேகரிப்பு தொட்டிகள், பொது நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் ஊராட்சி அளவிலான நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்பட உள்ளது.

இங்கிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 789 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோடையில் தடுமாறும் நகராட்சி இதில், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை இருந்தாலும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

பொதுவாக வெள்ள காலத்தில் மட்டுமே மணிமுக்தாற்றில் நீர்வரத்து இருக்கும். மற்ற காலங்களில் வறண்டு கிடப்பதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து, நகராட்சி பகுதியில் போர்வெல்கள் செயலிழக்கும்.

குறிப்பாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்ய முடியாமல் சீரான குடிநீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படும்.

அதுபோல், குடியிருப்புகளில் போர்வெல்கள் செயலிழந்து, 2 முதல் 3 லட்சம் வரை செலவழித்து, 350 அடிக்கு கீழே மீண்டும் போர்வெல் போடும் அவலம் தொடர்கிறது.

அன்றே சொன்ன தினமலர் இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பே விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.

அதில், நெய்வேலியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை குழாய்கள் வழியாக விருத்தாசலம் நகராட்சி பகுதியில் சேகரித்து, சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து நகராட்சி மக்களுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தின.

ரூ.8.85 கோடி ஒதுக்கீடு இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மூலதன மானிய நிதி - இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு நிதியின் கீழ் 6 கோடியும், விருத்தாசலம் நகராட்சி பங்களிப்பு நிதியாக 2.85 கோடியும் சேர்த்து 8.85 கோடி ரூபாய்க்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, நிதியும் ஒதுக்கப்பட்டது.

பெரியார் நகரில் சேமிப்பு இதன்படி, விருத்தாசலம் நகராட்சியில் நபர் ஒன்றுக்கு 45 லிட்டர் வீதம், நாள் ஒன்றுக்கு 6 லட்சத்து 17 ஆயிரத்து 40 லிட்டர் தண்ணீர் வழங்கவும், நெய்வேலி என்.எல்.சி.,யில் இருந்து ராட்சத குழாய்கள் வாயிலாக தண்ணீரை கொண்டு வந்து, பெரியார் நகரில் தேக்கி வைக்கவும், அங்கு, தண்ணீரை சுத்திகரித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரித்து, வழக்கமான பைப்லைனில் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டது.

ஓராண்டுக்கு மேலாகிறது இந்த திட்டத்திற்கு, கடந்தாண்டு மே 13ம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை.

இந்த திட்டத்தை பொருத்தவரை, நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் பெரியார் நகர் வரை குழாய்கள் பொருத்தம், தேக்கி வைக்கும் தொட்டி, சுத்திகரிப்பு தொட்டி, மேல்நிலைத் தொட்டிகள் அமைப்பது போன்ற திட்ட மதிப்பீடு அறிக்கை பொதுப்பணித்துறையால் வழங்கப்பட வேண்டும்.

இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் ஒரு குழு அமைத்து, அவர்கள் வாயிலாக திட்ட மதிப்பீடு அறிக்கை வழங்க வேண்டும். அதன்பின்னரே, கூட்டுக்குடிநீர் திட்டம் துவங்கிட ஒப்புதல் வழங்கப்படும் என அரசு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலத்தடிநீரை சேமிக்க வாய்ப்பு இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

விருத்தாசலம் நகராட்சியில், 33 வார்டுகளுக்கும் ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, மேல்நிலை தொட்டிகள் வாயிலாக காலை, மாலை வேளைகளில் குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் சப்ளை செய்வதால், நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். இதனால், மணிமுக்தாற்றில் நீரோட்டம் இல்லாத காலங்களிலும் நகரில் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us