/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டவுன், தாலுகா என போலீஸ் ஸ்டேஷன் பிரிக்கப்படுமா?: விருதையில் குற்றங்கள் குறைய வாய்ப்பு
/
டவுன், தாலுகா என போலீஸ் ஸ்டேஷன் பிரிக்கப்படுமா?: விருதையில் குற்றங்கள் குறைய வாய்ப்பு
டவுன், தாலுகா என போலீஸ் ஸ்டேஷன் பிரிக்கப்படுமா?: விருதையில் குற்றங்கள் குறைய வாய்ப்பு
டவுன், தாலுகா என போலீஸ் ஸ்டேஷன் பிரிக்கப்படுமா?: விருதையில் குற்றங்கள் குறைய வாய்ப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:53 AM
விருத்தாசலம் நகரில் 1924ம் ஆண்டில், போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில், நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகள், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, கோ.பொன்னேரி, மணவாளநல்லுார், எருமனுார் உட்பட 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
கிழக்கில் குப்பநத்த நல்லுார், மேற்கில் சாத்தியம், தெற்கில் சித்தலுார் புறவழிச்சாலை, வடக்கில் தே.கோபுராபுரம் ஊராட்சிகள் என நகராட்சி மற்றும் ஊராட்சிகளை உள்ளடக்கி சுமார் 3 லட்சம் பேருக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
இங்கு, 2000 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் சுவாமி கோவில், மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உட்பட பழமையான மசூதிகள், சர்ச்சுகள் உள்ளன. மேலும், அரசு கோட்ட அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், ஜவுளி, ஜூவல்லரி, தியேட்டர்கள், செராமிக் தொழிற்பேட்டை, மிகப்பெரிய மார்க்கெட் கமிட்டி ஆகியன அமைந்துள்ளன.
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீஸ்காரர்கள் என 50 பேர் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
நகராட்சி மற்றும் ஊராட்சிகள் என பறந்து விரிந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு, போராட்டம், ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் பிரசாரம், பொதுக்கூட்டம், அரசு விழாக்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர், அதே வட்டத்திற்கு உட்பட்ட கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன்களையும் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் கூடுதலாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
விருத்தாசலம் சரகத்தில் (விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி) கடந்த 12 ஆண்டுகளில், நிலத்தகராறு, கள்ளக்காதல், முன்விரோதம் போன்ற பிரச்னைகள், 27க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மேலும், வழிப்பறி, பைக் பெட்டி உடைத்து திருட்டு, ஏ.டி.எம்., மையத்தில் முதியவர்களை ஏமாற்றி திருட்டு, வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு என பல வகைகளில் 500க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
பொதுவாக, இரவு நேரங்களில் அதிகாரிகள் தலைமையில் போலீசார் இரவு ரோந்து செல்வது வழக்கம். அப்போது, சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து, அவர்கள் குற்ற வழக்குகளில் தொடர்பிருந்தால் கைது செய்வது வழக்கம். ஆனால், போதிய போலீசார் இல்லாமல், இரவு ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. இதனால் கிராமங்களிலும் வீட்டு வாசலில் துாங்குவோர், மாடியில் துாங்குவோரை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.
திருவிழா காலங்கள், அரசியல் கட்சி கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் விபத்து, தற்கொலை போன்ற சடலங்களை பிரேத பரிசோதனை செய்வது என போலீசருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
எனவே, பிரிட்டிஷ் காலத்தில், அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனையே தொடராமல் டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் என இரண்டாக பிரிக்க வேண்டும். இதனால் 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவதால், பொது மக்களை பாதுகாக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் முடியும்.
அதுபோல், போலீசாரும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பணிபுரிய முடியும்.